பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவனுக்கு முதல்-மந்திரி கொடுத்த காசோலை திரும்பி வந்தது: வங்கி அபராதமும் விதித்தது

உத்தரப்பிரதேச மாநில பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவனுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கையால் கொடுத்த காசோலை திரும்பி வந்தது. மேலும், வங்கி அபராதமும் விதித்தது.

Update: 2018-06-10 00:00 GMT
லக்னோ, 

உத்தரபிரதேச கல்வி வாரியம் நடத்திய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ‘ரேங்க்’ பெற்ற மாணவ-மாணவிகள், கடந்த மாதம் 29-ந் தேதி லக்னோவுக்கு வரவழைக்கப்பட்டனர். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கையால் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், காசோலையும் வழங்கப்பட்டன. அந்த மாணவர்களில், 93.5 சதவீத மதிப்பெண் பெற்று, 7-வது இடம் பிடித்த அலோக் மிஸ்ரா என்ற மாணவனும் ஒருவன். அவனுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

மாணவரின் தந்தை, காசோலையை லக்னோவில் உள்ள ஒரு வங்கியில் கடந்த 5-ந் தேதி போட்டார். ஆனால், கையெழுத்து பொருந்தவில்லை என்று கூறி, காசோலை திரும்பி வந்து விட்டது. அத்துடன், மாணவரின் தந்தைக்கு வங்கி அபராதமும் விதித்தது.

காசோலையில், பாரபங்கி மாவட்ட பள்ளி ஆய்வாளர் ராஜ்குமார் யாதவின் கையெழுத்து இருந்தது. ஏமாற்றம் அடைந்த மாணவருக்கு வேறு காசோலை அளிக்கப்பட்டு விட்டதாகவும், வேறு எந்த மாணவருக்கும் இத்தகைய பிரச்சினை எழவில்லை என்றும் ராஜ்குமார் யாதவ் கூறினார். இப்பிரச்சினைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்