மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்? பா.ஜனதா விளக்கம்

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது தொடர்பாக பா.ஜனதா விளக்கமளித்துள்ளது. #JammuAndKashmir #MehboobaMufti #PDP #BJP

Update: 2018-06-19 09:33 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜனதா கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகியது. 
காஷ்மீரில் ரமலான் மாதத்தில் பயங்கரவாதத்துடனான சண்டை நிறுத்தம் விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பா.ஜனதா ஆதரவை திரும்பபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக பா.ஜனதா தலைவர் ராம் மாதவ் விளக்கமளித்து பேசினார். அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணியை தொடர ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளோம், நாங்கள் எங்களுடைய ஆதரவை திரும்ப பெற்றுள்ளோம். பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதமாதல் ஆகியவை உயர்ந்துள்ளது, மக்களின் அடிப்படை உரிமையானது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி சுட்டுக்கொல்லப்பட்டது இதற்கு உதாரணம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் நன்மையை மனதில் கொண்டு, மாநிலத்தில் இப்போது எழுந்து உள்ள நிலையை கட்டுக்குள்கொண்டுவர ஆட்சியை ஆளுநர் கையில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம். 

பள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் மத்திய அரசு பொறுப்பு கிடையாது. பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். 

மக்கள் ஜனநாயக கட்சி அதனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜம்மு மற்றும் லாடக் பகுதியில் வளர்ச்சி பணியை மேற்கொள்ள மக்கள் ஜனநாயக கட்சியுடன் எங்களுடைய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொள்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய நடவடிக்கை தொடரும். நாங்கள் மக்களுடைய தீர்ப்புக்கு மதிப்பளிகிக்றோம். நாங்கள் அப்போது ஆட்சியை அமைக்கவில்லை என்றாலும் கவர்னர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி அமைந்திருக்கும். மக்களுடைய தீர்ப்புக்காகதான் நாங்கள் கூட்டணியை வைத்தோம் என கூறிஉள்ளார்.

மேலும் செய்திகள்