ரொட்டி கருகியதால் முத்தலாக் கூறி விவாகரத்து பெண் போலீசில் புகார்

ரொட்டி கருகியதால் கணவர் முத்தலாக் கூறி விவகாரத்து செய்துவிட்டார் என பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Update: 2018-07-09 11:46 GMT
லக்னோ, 
 
உத்தரபிரதேச மாநிலம் மெகோபா மாவட்டம் பெக்ரெதா கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் ரொட்டி கருக்கிவிட்டதால் என்னுடைய கணவர் தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்தான் இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகியுள்ளது. தன்னுடைய கணவர் சிகரெட்டால் சூடு வைத்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதித்ததோடு, இதுபற்றி சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, முத்தலாக் தடைக்கு சட்டம் இயற்றும் பொருட்டு, ‘முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை மசோதா’ பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த மசோதா டெல்லி மேல்-சபையில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவில் விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்