திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார். #Karunanidhi #RamnathKovind

Update: 2018-08-05 09:58 GMT



உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதுதவிர கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து புகழ் பெற்ற டாக்டர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டுள்ளார். அவரும் காவேரி ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினருடன் இணைந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வரும் மருத்துவக்குழுவினர், அவருக்கு தினந்தோறும் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று குணமடைந்து வருகிறது. எனவே ஆஸ்பத்திரியில் இருந்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுவதற்காக பிரத்யேக வசதிகளும் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த தகவல், கவலையோடு இருந்த தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர். அந்தவகையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காவேரி ஆஸ்பத்திரி வரையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்த ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் ஜெயக்குமார் இருந்தனர்.

மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார். உடல்நிலை குறித்து விசாரித்த பின் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். இதற்கிடையே அவருடைய டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்