ஆதார் எண்ணை வெளியிட்டு சங்கடத்துக்குள்ளான டிராய் சேர்மன் ஆர்.எஸ் சர்மாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

டிராய் சேர்மன் ஆர்.எஸ் சர்மாவின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-09 11:49 GMT
புதுடெல்லி,
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) தலைவரும் ஆதார் ஆணைய முன்னாள் தலைவருமான ராம் சேவக் சர்மா தனது ஆதார் எண்ணை டுவிட்டரில் வெளியிட்டு, இதன் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்று அண்மையில் சவால் விடுத்தார். இதையடுத்து, சர்மாவின் புகைப்படம், பிறந்த தேதி, வீட்டு முகவரி, செல்போன் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை சிலர் வெளியிட்டனர். 

ஆனால், இந்தத் தகவல் எல்லாம் பொது வெளியில் இருந்து கூகுள் தேடுபொறி மூலம் திரட்டப்பட்டதாகவும், ஆதார் தகவல் தொகுப்பிலிருந்து சேகரிக் கப்படவில்லை என்றும் சர்மா தெரிவித்திருந்தார்.அத்துடன் இதன்மூலம் எனக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றுதான் நான் சவால் விடுத்தேன் என்றும் கூறியிருந்தார்.  ஆதார் எண்ணை வெளியிட்டது  சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. 

டிராய் சேர்மன் ஆர். எஸ் சர்மாவின் பதவிக்காலம், இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில்,  மேலும், 2 ஆண்டுகளுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  தற்போது 63 வயதாகும் ஆர்.எஸ் சர்மா தனது 65 -வது வரை அதாவது செப்டம்பர் 2020 அப்பொறுப்பில் நீடிப்பார் என்று அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்