இருசக்கர வாகனத்திற்கு இ.எம்.ஐ கட்ட பணம் தேவைப்பட்டதால் தனியார் வங்கியின் துணைத்தலைவரை கொன்ற இளைஞர்

இருசக்கர வாகனத்திற்கு இ.எம்.ஐ கட்ட பணம் தேவைப்பட்டதால் எச்.டி.எஃப்.சி.வங்கியின் துணைத்தலைவரை கொன்றதாக இளைஞர் ஒருவர் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். #HDFCVicePresident

Update: 2018-09-11 07:17 GMT
மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வி (39) கடந்த 5-ந் தேதி மர்மமான முறையில் மாயமானார். மும்பையிலுள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் வங்கி அலுவலகத்திற்கு சென்ற சித்தார்த் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ஜோஷி மார்க் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

இதனிடையே எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சாங்வி மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் ஐரோலி பகுதியில் அவரது காரை கண்டெடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை கல்யான் பகுதியில் சித்தார்த் சாங்வி, போலீசாரால் சடலமாக மீட்கப்பட்டார். சாங்வி மரணம் தொடர்பாக கார் ஓட்டுனர் ஷர்ஃபராஷ் ஷாயிக் (20) என்பவரை கைது விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து போஇவாடாவிலுள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கொலை செய்த காரணத்தை ஷாயிக் கூறினார். இந்நிலையில் ஷாயிக்கின் கூறிய கொலைக்காரணத்தை நிறுத்துமாறு கூறிய மாஜிஸ்திரேட், ஷாயிக்கை செப்டம்பர் 19-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனிடையே சாங்வி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தன்னுடைய இரு சக்கர வாகனத்திற்கு இ.எம்.ஐ கட்ட முடியாமல் பரிதவித்து வந்த ஷாயிக்கிற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. கார் ஓட்டுனராக இருக்கும் ஷாயிக், சித்தார்த் சாங்வி அடிக்கடி அலுவகத்திற்கு சென்று வருவதை நோட்டமிட்டுள்ளார். இதனால் சாங்வியை கடத்திய ஷாயிக், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு மறுத்த சாங்வி கூச்சலிடவே அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஷாயிக், நவிமும்பை வரை காரை ஓட்டிச் சென்று பின்பு காரை விட்டு வெளியேறி தப்பியுள்ளார். இருப்பினும் அவனது வாக்குமூலத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ள காரணத்தினால், அவனை போலீஸ்காவலில் விசாரிக்க நீதிமன்றத்திடம் ஒப்புதல் வாங்கியுள்ளோம். ஷாயிக்குடன் இணைந்து வேறு எவரும் கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என விசாரித்து வருகிறோம். மேலும் சாங்வியின் சில முக்கியமான பொருட்கள் காணாமல் போயுள்ளதால் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம் எனக் கூறினார்.

கொலையுண்ட சித்தார்த் சங்வி, மலபார் ஹீல் பகுதியில் தனது மனைவி மற்றும் 8 வயது மகனுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்