ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-09-23 23:30 GMT

அமராவதி,

ஆந்திர மாநிலம் அரகு தொகுதி தெலுங்கு தேச எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வரா ராவ். இவரும், அதே கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் கிராம பகுதியில் மக்களை சந்திக்க காரில் சென்றனர்.

லிப்பிடிபுட்டா என்ற கிராமத்துக்கு அவர்கள் சென்ற போது கிராம மக்கள் ஏராளமானோர் காரை மறித்தனர். உடனே எம்.எல்.ஏ. பாதுகாப்புக்கு சென்ற துப்பாக்கி ஏந்திய போலீசாரும் அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர்.

அப்போது காரில் இருந்து கிடாரி சர்வேஸ்வரா ராவ், சிவேரி சோமா ஆகியோர் இறங்கி அவர்களிடம் குறைகளை கேட்க முயன்றனர். திடீரென அந்த கூட்டத்தில் இருந்த சிலர் போலீசாரின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து கிடாரி சர்வேஸ்வரா ராவையும், சிவேரி சோமாவையும் சரமாரியாக சுட்டனர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதையடுத்து கூட்டத்தில் இருந்த மாவோயிஸ்டு அமைப்பினர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இச்சம்பவம் பற்றி அறிந்த துணை முதல்–மந்திரி சின்ன ராஜப்பா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் லிப்பிடிபுட்டா கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘மக்கள் கூட்டத்தில் புகுந்து எத்தனை பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள்? எதற்காக எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஆந்திரா–ஒடிசா எல்லையில் உள்ள மாவோயிஸ்டு அமைப்பின் செயலாளர் ராமகிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதன் அடிப்படையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு அமைப்பினரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

கிடாரி சர்வேஸ்வரா ராவ் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் தெலுங்கு தேச கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தற்போது அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மாவோயிஸ்டுகளின் இந்த செயலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்