இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நேரிட்ட வெள்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update:2018-09-24 19:32 IST



இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மூன்று நாட்களாக பெய்யும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மழையினால் நேரிட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 200 சாலைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளத்தினால் பள்ளி மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே சிக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மழையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது. 

இதற்கிடையே கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. அனுராக் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதுபோன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கனமழை பெய்துள்ளது. வடமாநிலங்களில் கனமழை பெய்யும் நிலையில் ராணுவம் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்