ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தது மொபைல் போன்; ஆனால் கிடைத்தது செங்கற்கட்டி

மகாராஷ்டிராவில் மொபைல் போனுக்கு ஆன்லைனில் ஆர்டர் கொடுத்த நபருக்கு செங்கற்கட்டி கிடைத்துள்ளது.

Update: 2018-10-17 11:15 GMT
அவுரங்காபாத்,

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் ஹட்கோ பகுதியில் வசித்து வருபவர் கஜானன் காரத்.  கடந்த 9ந்தேதி ஆன்லைன் வழியே மொபைல் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.  இதற்காக ரூ.9,134 பணமும் செலுத்தியுள்ளார்.

அதன்பின் ஒரு வாரத்திற்குள் போன் கிடைத்து விடும் என வர்த்தக நிறுவனத்திடம் இருந்து அவருக்கு தகவல் வந்துள்ளது.  இந்த நிலையில், கஜானனுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது.  அதனை அவர் பிரித்துள்ளார்.  அதில் மொபைல் போனுக்கு பதிலாக செங்கற்கட்டி ஒன்று இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூரியர் கொண்டு வந்த நபரிடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டுள்ளார்.  ஆனால் பார்சலை கொண்டு வருவது என்பதே தனது பொறுப்பு என்றும் உள்ளே என்ன உள்ளது என பார்ப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஹர்சூல் காவல் நிலையத்தில் கஜானன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்