சத்தீஷ்காரில் கண்ணி வெடி தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சத்தீஷ்காரில் கண்ணி வெடி தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

Update: 2018-11-08 21:00 GMT
ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டத்தில் ஆகாஷ் நகர் என்கிற பகுதியில் முகாமிட்டிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புபடையினர் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள பகுதிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து பஸ்சில் முகாமிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த பஸ் பசோலி-ஆகாஷ் நகர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நக்சலைட்டுகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில், மத்திய தொழில் பாதுகாப்புபடையினர் பயணம் செய்த பஸ் சிக்கி உருக்குலைந்து போனது. இந்த கோர சம்பவத்தில் மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர், பஸ் டிரைவர் மற்றும் கன்டக்டர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தண்டேவாடா மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஜக்தல்பூர் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்