சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நேர்மையான நபர்: சுப்ரமணியன் சுவாமி கருத்து

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நேர்மையான நபர் என்றே நான் கருதுவதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-16 07:07 GMT
புதுடெல்லி,

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி நிலவியது. இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கினர். இந்தச் சூழலில், அவர்கள் இருவரையும் பொறுப்பில் இருந்து விடுவித்து, 

கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. நாகேஸ்வர ராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி, சிபிஐயின் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், அலோக் வர்மா நேர்மையான நபர் என்றே தான் கருதுவதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது;- “ அலோக் வர்மா டெல்லி காவல்துறை ஆணையராக இருந்தபோதே அவரைத் தெரியும். அவர் ஏர்செல் மேக்சிஸ் மற்றும் பிற வழக்குகளில் சிபிஐ சார்பாகப் பணிபுரிந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நேர்மையான மனிதர்.அவருக்கு எதிராக  அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான நமது பிரச்சாரத்தை இது காயப்படுத்துகிறது. உச்ச நீதிமன்றம் அவருக்கு நியாயம் வழங்கும் என நம்புகிறேன்'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்