தமிழகத்தில் ‘கஜா’ புயல் பாதிப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி பேச்சு

‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசியுள்ளார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

Update: 2018-11-16 16:03 GMT
சென்னை, 

தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், பணியாளர்களும் ஒருங்கிணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “கஜா புயல் காரணமாக நேரிட்டுள்ள நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்தேன். தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ‘கஜா’ புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். புயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், தற்போது புயலால் ஏற்பட்ட சேதங்கள், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து விளக்கமாக ராஜ்நாத் சிங்கிடம், எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். ‘கஜா’ புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்