இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு : டி.டி.வி.தினகரனை விடுவிக்க டெல்லி கோர்ட்டு மறுப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி. தினகரனை விடுவிக்க டெல்லி கோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2018-11-18 00:00 GMT

புதுடெல்லி,

டி.டி.வி. தினகரன்  மீது அடுத்த மாதம் 4–ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க., 2 அணிகளாக பிரிந்தது. 2017–ல் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

அந்த சின்னத்தை பெற இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் 26–ந் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டுகள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் ஹரன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீது சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு) அஜய் பரத்வாஜ் ஏற்கனவே விசாரணை நடத்தினார். அப்போது டெல்லி போலீஸ் தரப்பில் வாதிடும்போது, ‘‘இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனில் பெருந்தொகை பேரம் பேச முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்காக தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூன் உள்ளிட்டோர் சுகேஷ் தலைமையில் இயங்கி உள்ளனர். இதில் ரூ.2 கோடி டெல்லிக்கு ஹவாலா மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி ஓட்டலில், சுகேஷிடம் இருந்து ரூ.1.32 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. சுகேஷ் மற்றும் தினகரன் இடையிலான தொலைபேசி உரையாடல் பதிவு ஆதாரங்கள் உள்ளன. எனவே, இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்’’ என கூறப்பட்டது.

தினகரன் உள்ளிட்டோர் தரப்பில் வாதிடும்போது, ‘‘ டெல்லி போலீசார் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை. தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரிக்கப்படவும் இல்லை. இந்த வழக்கில் ரூ.1.32 கோடி கைப்பற்றியதாகவும், தொலைபேசி உரையாடல் சி.டி. சேகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 7 சி.டி.க்களில் 6 சி.டிக்களின் பதிவுகளில் உள்ள குரல் மாதிரிகள் பொருந்தவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் அரசு ஊழியர்கள் கிடையாது. அதனால் இந்த வழக்கு தொடர்பானவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய முடியாது’’ என கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த மனுவின் மீது சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி அஜய் பரத்வாஜ் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

அதில், ‘‘இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(B) (கிரிமினல் சதி), ஐ.பி.சி 201 (சாட்சியங்களை கலைக்க முயன்றது), ஊழல் தடுப்பு பிரிவு 8(3) (அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது) ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது. எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது’’ என்று உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவில் கூறி உள்ள பிற முக்கிய அம்சங்கள்:–

* டி.டி.வி.தினகரனுடைய நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், வக்கீல் பி.குமார் ஆகியோரும் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது. அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம்.

* லலித் குமார், நரேஷ் (எ) நத்துசிங், புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம், நரேந்திர ஜெயின் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

* டி.டி.வி.தினகரன் டிசம்பர் 4–ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். (அப்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்). டிசம்பர் 17– தேதியில் இருந்து சாட்சிகள் விசாரணை நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்