குளிருக்கு வீட்டில் தீ மூட்டிய குடும்பத்தினர்; மூச்சுத்திணறி 4 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பாட்னா,
உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் குளிர் அதிக அளவில் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் சரன் மாவட்டம் ஷப்ரா பகுதியை சேர்ந்த 8 பேரை கொண்ட குடும்பத்தினர் அதிக குளிரில் இருந்து தப்பிக்க நேற்று முன் தினம் இரவு வீட்டிற்குள் தீ மூட்டியுள்ளனர். வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ மூட்டி அறையின் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு உறங்கியுள்ளனர். அப்போது நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைவரும் மயங்கியுள்ளனர்.
காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவுகள் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு குடும்பத்தினர் 8 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதில், 3 குழந்தைகள் உள்பட 4 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். எஞ்சிய 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.