புத்தாண்டு கொண்டாட்டம்; முன்னெச்சரிக்கையாக டெல்லியில் 285 பேர் கைது - ஆயுதங்கள் பறிமுதல்

தென்கிழக்கு டெல்லி காவல்துறையால் ‘ஆகாத் 3.0’ என்ற பெயரில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.;

Update:2025-12-27 14:46 IST

புதுடெல்லி,

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் டெல்லி காவல்துறை நேற்று இரவு முழுவதும் விரிவான சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. ‘ஆகாத்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் 285 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. புத்தாண்டு விழாக்களுக்குத் தயாராகி வரும் டெல்லியில், குற்றச்செயல்களை முன்கூட்டியே கட்டுப்படுத்தும் வகையில், நகரம் முழுவதும் ஒரே இரவில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தென்கிழக்கு டெல்லி காவல்துறையால் ‘ஆகாத் 3.0’ என அழைக்கப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையில், குற்றச்செயல்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டு, தொடர் குற்றவாளிகள் குறிவைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, ஆயுதச் சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் மற்றும் சூதாட்டச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 285 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஏற்படக்கூடிய குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 504 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பட்டியலில் உள்ள 116 குற்றவாளிகளும் காவல்துறையால் பிடிபட்டனர்.

சோதனைகளின் போது ஐந்து வாகனத் திருடர்களும் கைது செய்யப்பட்டனர். அதோடு, 21 நாட்டுத் துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் 27 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் புத்தாண்டை முன்னிட்டு போதைப்பொருட்களை சந்தையில் பரப்ப முயன்ற திட்டம் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது திருடப்பட்ட 310 மொபைல் போன்கள், 231 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவையும் காவல்துறையால் மீட்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்