கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக...கணவருக்கு மதுவை ஊற்றி கழுத்தை இறுக்கி கொன்ற ஆசிரியை

வீட்டின் உரிமையாளரும் லட்சுமன் நாயக்கிற்கு போன் செய்தார். போன் எடுக்காததால், அவர் மீண்டும் பத்மாவுக்கு தகவல் தெரிவித்தார்;

Update:2025-12-27 21:37 IST

திருப்பதி

நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை, மாருதி நகரைச் சேர்ந்தவர் லட்சுமன் நாயக் (வயது 40). இவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பத்மா அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். லட்சுமன் நாயக் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மனைவி தனியாக வசித்து வந்ததால், தனது பணியை ராஜினாமா செய்து மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், உப்பந்தூரு அடுத்த தாடுரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் கோபி என்பவருடன் பத்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் லட்சுமன் நாயக்கிற்கு தெரிய வந்தது. கள்ளக்காதலை கைவிடுமாறு அவர் மனைவியை வற்புறுத்தி வந்தார். ஆனால், பத்மாவின் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படாததால், கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, லட்சுமன் நாயக்கின் உறவினர்கள் பலமுறை இருவரையும் அழைத்து பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்தினர். மனைவியின் நடத்தையால் விரக்தியடைந்த லட்சுமன் நாயக் மது பழக்கத்திற்கு அடிமையானார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என பத்மா, தனது கள்ளக்காதலன் கோபியிடம் தெரிவித்தார்.அதன்படி, நேற்று முன்தினம் இரவு லட்சுமன் நாயக் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கோபி தனது தாய், தங்கை மற்றும் சகோதரருடன் பத்மாவின் வீட்டிற்கு வந்தார்.தூங்கிக் கொண்டிருந்த லட்சுமன் நாயக்கின் வாயில் வலுக்கட்டாயமாக 2 பாட்டில் மதுவை ஊற்றினர். பின்னர் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். கொலை நடந்த இடத்தில் 2 காலி மது பாட்டில்களையும் வைத்தனர்.நேற்று காலை ஒன்றும் தெரியாதது போல் பத்மா வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து கணவருக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்தார். பின்னர், வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து, தனது கணவர் போனை எடுக்கவில்லை; வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

வீட்டின் உரிமையாளரும் லட்சுமன் நாயக்கிற்கு போன் செய்தார். போன் எடுக்காததால், அவர் மீண்டும் பத்மாவுக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, பத்மா பள்ளியில் இருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தார். வீட்டில் கணவர் அதிக அளவில் மது குடித்து இறந்து கிடப்பதாக கூறி, அழுது புரண்டு நாடகமாடினார்.லட்சுமன் நாயக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் பத்மாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பத்மா தனது கள்ளக்காதலன் கோபி, அவரது தாய், தங்கை மற்றும் சகோதரருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாணவர்களுக்கு ஒழுக்கம் குறித்து பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியை ஒருவர், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்