காஷ்மீரில் மெகபூபா முப்தி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் பேரவையை கலைத்து கவர்னர் உத்தரவு

காஷ்மீரில் மெகபூபா முப்தி ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் சட்டப்பேரவையை கலைத்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-11-21 16:05 GMT

ஸ்ரீநகர்,


2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் எந்தஒரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 28, பா.ஜனதா 25, தேசிய மாநாடு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களை கைப்பற்றின. இதர கட்சிகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. மெகபூபா முப்தி முதல்–மந்திரி ஆனார். ஆனால் கடந்த ஜூன் மாதம் அவருக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா விலக்கிக் கொண்டது. 

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் ஆட்சியமைக்க பா.ஜனதா நடவடிக்கை மேற்கொண்டது. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக பா.ஜனதா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை முறியடிக்கும் விதமாக   மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முன்வந்தது. ஆட்சியமைக்க உரிமை கோரி மெகபூபா முப்தி கவர்னர் சத்யபால் மாலிக்கிற்கு கடிதம் எழுதினார். கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்ப முயற்சி செய்ததாகவும் ஆனால் வெற்றியடையவில்லை. கவர்னர் மாளிகையை தொலைபேசி மூலமாகவும் தொடர்புக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்து டுவிட்டரில் கடிதம் வெளியிட்டார்.

பா.ஜனதாவிற்கு எதிராக மகா கூட்டணியாக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்த நிலையில் கவர்னர் சத்யபால் மாலிக் சட்டசபையை கலைத்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பலமுறை தேசிய மாநாட்டு கட்சி சட்டசபையை கலைக்க கோரிய போது எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது கூட்டணி என்றதும் பேரவை கலைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்