சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் வீடு பராமரிப்பு நிதி இரு மடங்காக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் வீடு பராமரிப்பு நிதி இரு மடங்காக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2018-11-25 19:03 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் தேர்தல் கமிஷனர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வீடுகளின் பராமரிப்பு மற்றும் மரச்சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் வழங்கும் பணிகளுக்கு அரசே நிதி ஒதுக்குகிறது. இந்த நிதியை தற்போது இரு மடங்காக உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கப்பட்டு உள்ள அரசு இல்லத்துக்கு ரூ.5 லட்சமாக ஒதுக்கப்பட்டு இருந்த நிதி, தற்போது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதைப்போல சுப்ரீம் கோர்ட்டின் பிற நீதிபதிகள், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களின் வீடுகளுக்கு வழங்கப்படும் நிதியும் ரூ.4 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் கட்டுமான அமைப்பான மத்திய பொதுப்பணிகள் துறைக்கு அரசு சார்பில் அறிவிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனம்தான் மத்திய அரசு வீடுகளில் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்