பாலியல் புகாரில் நீக்கப்பட்ட ஆயுதப்படை உயர் அதிகாரிக்கு மீண்டும் பணி இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

பாலியல் புகாரில் நீக்கப்பட்ட ஆயுதப்படை உயர் அதிகாரிக்கு மீண்டும் பணி இல்லை என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-02 22:30 GMT
புதுடெல்லி,

டெல்லியில் 2014-ம் ஆண்டு, மத்திய ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் சந்தீப் யாதவ். இவர் சிறப்பாக பணியாற்றியதற்காக 2010-ம் ஆண்டு ஜனாதிபதி பதக்கம் பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில் இவர் திருமணமான ஒரு பெண்ணுக்கு செல்போன் வழியாக தனது நிர்வாண படத்தை அனுப்பி வைத்ததுடன், தொலைபேசியில் தொடர்ந்து ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் புகார் செய்தார். அதன்பேரில் துறை ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பது கண்டறியப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், சஞ்சீவ நருலா ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில், பணி நீக்கம் செய்யப்பட்ட சந்தீப் யாதவுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்க நீதிபதிகள் மறுத்து உத்தரவிட்டனர். இதனால் அவர் மீண்டும் பணியில் சேர முடியாது.

இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பொது ஊழியர் ஒருவர் உயர்ந்த நிலையில் இருக்கிறபோது, உயர்ந்த நெறிமுறையை பராமரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்