பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.

Update: 2018-12-07 17:27 GMT
புதுடெல்லி,

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்து உள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்வதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகத்தில் உள்ள காவிரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும்  என்று தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்கினார். மேலும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்