காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

Update: 2018-12-07 22:00 GMT
புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான பூர்வாங்க ஆய்வு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசும், மேகதாது அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தது. புதுச்சேரி அரசு தரப்பில் மூத்த வக்கீல் வி.ஜி.பிரகாசம் தாக்கல் செய்த இந்த மனுவில், அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி அளித்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர மத்திய மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு ஏற்கனவே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுடன், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்