மோடி மத்திய அமைச்சரவையும் விட்டுவைக்கவில்லை யஷ்வந்த் சின்ஹா தாக்கு

மோடி அரசில் அமைச்சரவைதான் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது என முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2018-12-10 13:14 GMT

புதுடெல்லி,


ஆர்.பி.ஐ., நீதித்துறை, சிபிஐ உள்ளிட்ட அரசு முகமைகளின் சுதந்திரம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜனதாவிலிருந்து வெளியேறியவருமான யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், மோடி அரசில் மத்திய அமைச்சரவைதான் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது என விமர்சனம் செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் “ஐடியா ஆப் பெங்கால்” கருத்தரங்கில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, மத்திய அமைச்சரவை உள்பட பல்வேறு அரசு முகமைகளை மோடி அரசு சிதைக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

மோடி அரசில் இரண்டாவது பாதிப்புக்குள் சிக்கியது பாராளுமன்றம், பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்கையில் மாநிலங்களவையை சிறுமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது எனவும் குறிப்பிட்டார். 

யஷ்வந்த் சின்ஹா பேசுகையில் முக்கியமான மசோதாக்கள் தொடர்பாக விவாதம் நடைபெறும் போதும், நிறைவேற்றப்படும் போதும் மாநிலங்களவை குறித்து குறைத்து மதிப்பிடுகிறார். மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களையும், அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்துவிட்டது. இதில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது மத்திய அமைச்சரவைதான். ஏனென்றால் முக்கியமான முடிவுகள் அனைத்தும் மத்திய அமைச்சரவையில் ஆலோசனை செய்யாமலே எடுக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என எதுவாக இருக்கட்டும். அனைத்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். 

மத்திய அரசு ஜிடிபியை கணக்கிடும் முறையையும் சிதைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு இப்போதைய பாஜக அரசைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டது. ஆனால், காங்கிரஸ் அரசில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. இப்போது பா.ஜனதா அரசு வைத்துள்ள புள்ளிவிவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதுபோல் காட்டப்படுகிறது. அனைத்து விதமான தவறுகளுக்கும் காங்கிரஸ் அரசை குறை சொல்வதையே மோடியின் அரசு வழக்கமாக கொண்டுள்ளது எனவும் விமர்சனம் செய்துள்ளார் யஷ்வந்த் சின்ஹா. 

மேலும் செய்திகள்