ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன.

Update: 2018-12-14 23:32 GMT
திருவனந்தபுரம்,

உலகப்புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதை தொடர்ந்து அனைத்து வயது பெண்களையும் கேரள மாநில அரசு அனுமதித்துள்ளது. இதைக்கண்டித்து பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரவும், சபரிமலைக்கு பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து செல்லவும் கேரள போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

அந்த வகையில் சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 144 தடை உத்தரவை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம் முன்பு பா.ஜனதா சார்பில் பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

மாநில பொதுச்செயலாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. எனினும் பா.ஜனதாவினர் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு தலைமை செயலகம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த போராட்ட பந்தல் அருகில் ஆர்.எஸ்.எஸ். தொண்டரான முட்டடையை சேர்ந்த வேணுகோபாலன் நாயர் (வயது 49) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தற்கொலைக்கு காரணமான மாநில அரசை கண்டிக்கும் வகையில் கேரள மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்து இருந்தது.

அதன்படி நேற்று கேரள மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கியது.

அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை குறைவாகவே இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பஸ்கள் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பணிமனைகளில் முடங்கின.

தனியார் பஸ்கள், வாடகை வாகனங்களின் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாயினர்.

கேரளாவில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு வந்த மாணவர்கள் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

அவர்களுக்காக மட்டும் பா.ஜனதா கட்சியினர் சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் சபரிமலைக்கு வந்த அய்யப்ப பக்தர்களும் பஸ்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா சென்ற பஸ்கள் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

நேற்று நடந்த போராட்டத்தையும் சேர்த்து, சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் பா.ஜனதா சார்பில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்ட வாரியாகவும், மாநில வாரியாகவும் 7 முறை முழு அடைப்பு போராட்டம் நடந்துள்ளன.

மேலும் செய்திகள்