பாலியல் துன்புறுத்தல் புகாரால் சஸ்பெண்டான ஐ.டி. நிறுவன உயரதிகாரி தற்கொலை

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் புகாரால் சஸ்பெண்டான ஐ.டி. நிறுவன உயரதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-20 15:55 GMT
நொய்டா,

உத்தர பிரதேசத்தில் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உதவி துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ஸ்வரூப் ராஜ் (வயது 35).  நொய்டா நகரில் வசித்து வந்த இவர் 2007ம் ஆண்டு நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.  சமீபத்தில் பதவி உயர்வு பெற்று இந்த பணிக்கு வந்துள்ளார்.  இவர் மீது 2 பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளனர்.

இதுபற்றிய விசாரணை முடியும்வரை பணிக்கு வரவேண்டாம் என நிறுவனம் கூறிவிட்டது.  இந்த நிலையில், வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அருகில் இருந்த குறிப்பு ஒன்றையும் கண்டெடுத்து உள்ளனர்.  அதில் தனது மனைவிக்கு எழுதியுள்ள குறிப்பில், எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை.  ஆனால் தவறு செய்யவில்லை என தெரிந்து மீண்டு வந்த பின்பும் மக்கள் என்னை தவறாகவே காண்பார்கள்.

என்னை நம்பு.  நான் எதனையும் செய்யவில்லை.  உலகம் இதனை புரிந்து கொள்ளும்.  ஆனால் நீயும், நமது குடும்பத்தினரும் என்னை நம்ப வேண்டும்.  நிறுவனத்தில் உள்ள அனைவரும் இதனை அறிந்து கொள்வார்கள் என எழுதி உள்ளார்.

இதுபற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் பேசும்பொழுது, இவர் மீது கடுமையான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.  ஒரு வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடத்தவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து, எங்கள் அனைவருக்கும் இது மிக துயரம் நிறைந்த தருணம்.  நண்பர்களாக, உடன் பணிபுரிபவர்களாக அவரது குடும்பத்தினரின் துயரில் நாங்கள் உடனிருக்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்