இந்தியாவில் தொடர் தாக்குதலை நடத்துவது தொடர்பான பயங்கரவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு

இந்தியாவில் தொடர் வெடிகுண்டு தாக்குதலை நடத்தும் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

Update: 2018-12-26 11:24 GMT
புதுடெல்லி,

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட குழு ஒன்று இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது.  வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் தாக்குதலை நடத்த இந்த குழு திட்டமிட்டுள்ளது. ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்ற இந்த குழு தொடர்பாக கிடைத்த தகவலை கொண்டு தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிரடி சோதனை நடத்தியது.

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. குழுவுடன் தொடர்புடைய 10 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் இருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அசிம் அருண் கூறியுள்ளார். மேலும் ஐந்து பேர் வடகிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழுவின் செயல்பாடு தொடர்பாக சந்தேகம் எழுந்ததை அடுத்து தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் இருந்து வந்துள்ளது.

இந்த பயங்கரவாத குழு கடந்த 6 மாதங்களாக செயல்பட்டுள்ளது, இதில் 20 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
தொடர் தாக்குதலுக்கு திட்டம்

சோதனை தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு ஐஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் போன்ற பயங்கரவாத குழு செயல்பாடு தொடர்பாக உத்தரபிரதேசம், டெல்லியில் 17 இடங்களில் சோதனையை மேற்கொண்டோம். அவர்கள் இந்தியாவில் தொடர்ச்சியான வெடிகுண்டு தாக்குதலை நடத்த ஆயத்தமான நிலையில் இருந்துள்ளனர். டெல்லியில் சீலாம்பூர், உபி.யின் அம்ரோகா, ஹாபூர், மீரட் மற்றும் லக்னோவில் சோதனை நடத்தப்பட்டது.

அவர்களிடம் இருந்து வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ராக்கெட் லாஞ்சர்களும் இதுவரையில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.7.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100 செல் போன்கள், 135 சிம் கார்டுகள், லேப்-டாப்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. சில இடங்களில் சோதனை தொடர்கிறது. சந்தேகத்திற்குரிய 16 பேரிடம் முதல்கட்டமாக விசாரிக்கப்பட்டது. 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். 



பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பிற முக்கியஸ்தர்களை குறிவைத்துள்ளனர். தற்கொலை தாக்குதல் மற்றும் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்வது போன்ற தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு வெளிநாட்டு முகவர்களுடன் தொடர்பு உள்ளது. அவர்களின் அடையாளம் காணப்பட வேண்டியதுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்