நக்சலைட்டு தாக்குதலில் பலியான தூர்தர்சன் ஒளிப்பதிவாளர் பெற்றோருக்கு பிரதமர் மோடி ஆறுதல்

சட்டீஸ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்ட தூர்தர்சன் ஒளிப்பதிவாளர் பெற்றோரை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2019-01-15 10:28 GMT
பலாங்கீர்,

சத்தீஷ்காரில் கடந்த அக்டோபர் 30ந்தேதி நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் தூர்தர்சன் செய்தி சேனலின் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு என்பவர் கொல்லப்பட்டார்.  இதனை தொடர்ந்து பிரசார் பாரதி சார்பில் இரங்கல் கூட்டமும் நடந்தது.

இதில் கலந்து கொண்டு மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பேசும்பொழுது, டி.டி. நியூஸ் சேனலில் பணியாற்றும் நமது பணியாளர்கள் பல்வேறு பணிகளுக்காக வெளியே செல்லும்பொழுது தைரியமுடன் மற்றும் வீரமுடன் செயல்படுவர் என்பது எனக்கு தெரியும்.  எதுவும் நடக்கலாம்.

அந்த இடத்தில் இருப்பதற்கு, அங்கு செல்வதற்கு, அங்கு செயல்படுவதற்கு என பெரிய அளவிலான தைரியம் மற்றும் தொழில் சார்ந்த அறிவு இருக்க வேண்டும் என்று பேசினார்.  தொடர்ந்து அவர், நாட்டை காக்கும் சேவையில் ராணுவ வீரர்கள் செயல்படுவது போன்று, நாமும் நாட்டுக்கு சேவை செய்து வருகிறோம் என்றும் அவர் பேசினார்.

இந்த நிலையில், ஒடிசாவில் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்றார்.  அவர் ஒடிசாவில் ரூ.1,550 கோடியிலான திட்டங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார்.  இதில் ரெயில்வே வழித்தடங்கள், பாலம், புதிய ரெயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நக்சலைட்டுகள் தாக்குதலில் பலியான தூர்தர்சன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹுவின் பெற்றோர் ஒடிசாவில் உள்ள பலாங்கீர் நகரில் வசித்து வருகின்றனர்.  அவர்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேசினார்.  அவருடன் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.  அங்கு சாஹுவின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்