பாகிஸ்தான் சிறைகளில் 167 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு - மத்திய அரசு தகவல்
இந்திய சிறைக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந்தேதி தங்கள் நாட்டின் சிறைகளில் இருக்கும் பாகிஸ்தான் மற்றும் இந்திய சிறைக் கைதிகளின் விவரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. அந்த வகையில் இன்று தூதரக தொடர்புகள் வாயிலாக இருநாடுகளுக்கும் இடையே கைதிகள் தொடர்பான விவரம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்திய சிறைகளில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 391 சிவில் கைதிகள் மற்றும் 33 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் பாகிஸ்தான் வெளியிட்ட தகவலின்படி, இந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்று நம்பப்படும் 58 சிவில் கைதிகள் மற்றும் 199 மீனவர்கள் அந்நாட்டின் சிறைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்திய சிறைக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியாவை சேர்ந்த 35 சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களுக்கு உடனடி தூதரக அணுகலை வழங்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, 2014 முதல் 2,661 இந்திய மீனவர்களும் 71 இந்திய சிவில் கைதிகளும் பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 2023 முதல் இன்றுவரை பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 500 இந்திய மீனவர்களும், 13 இந்திய சிவில் கைதிகளும் அடங்குவர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.