கடந்த ஆண்டு மோசமான வானிலைக்கு 1,400 பேர் பலி : மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ராஜீவன் நேற்று வெளியிட்டார்.

Update: 2019-01-16 22:30 GMT

புதுடெல்லி,

புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு, புழுதிப்புயல், மின்னல் தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு 1,428 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 590 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த மாநிலத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 166 பேரும், மின்னல் தாக்கி 39 பேரும், புழுதிப்புயலுக்கு 92 பேரும், குளிருக்கு 135 பேரும் இறந்துள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கை பொறுத்தவரை கேரளாவில் 223 பேர், உத்தரபிரதேசத்தில் 158 பேர், மராட்டியம் 139 பேர், மேற்கு வங்காளத்தில் 116 பேர், குஜராத்தில் 52 பேர் பலியாகினர். இதைத்தவிர டிட்லி மற்றும் கஜா புயல்கள் 122 பேரை காவு வாங்கி இருக்கிறது. காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவுக்கு 11 பேர் இரையாகி இருக்கின்றனர்.

இந்த இடர்பாடுகள் ஒருபுறம் இருக்க 1901–ம் ஆண்டுக்கு பிறகு அதிக வெப்பமான ஆண்டுகளில் 2018–ம் ஆண்டு 6–வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்