“ஊழல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்” - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊழல் கூட்டணி அமைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பரபரப்பு குற்றம் சாட்டினார்.

Update: 2019-01-20 23:30 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மகா கூட்டணி அமைக்கும் பணியில் இறங்கி உள்ளன. அந்தவகையில் 14 கட்சிகளை சேர்ந்த சுமார் 22 தலைவர்கள் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் கூடி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, மதசார்பற்ற ஜனதாதளம், ஆம் ஆத்மி, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்கள் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசியதுடன், மின்னணு வாக்குப்பதிவு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த மகா கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து உள்ளார். தெற்கு கோவா மற்றும் மராட்டியத்தின் கோலாபூர், மதா, சட்டாரா உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்குச்சாவடி மட்டத்திலான பா.ஜனதா தொண்டர்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பிரபலமானவர்களின் மகனாகவோ, அல்லது தங்கள் குழந்தைகளை அரசியலில் பிரபலமாக்குவதற்கு முயற்சிப்பவராகவோ தான் இருந்தார்கள். அவர்களிடம் பணபலம் உள்ளது. ஆனால் எங்களிடம் மக்கள் சக்தி இருக்கிறது.

அவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் நாங்களோ 125 கோடி மக்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். இதில் எந்த கூட்டணி பலமானது? என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. ஆனால் அதற்குள், வரவிருக்கும் தங்களின் தோல்விக்கு சாக்குபோக்கு கண்டுபிடிக்கும் பணியில் அவர்கள் இறங்கி விட்டனர். அதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வில்லனாக்கி விட்டனர்.

அந்த மேடையில் பேசியவர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றி பேசினார்கள். ஆனால் அந்த மேடையை பார்த்த போது எனக்கோ, போபர்ஸ் பீரங்கி ஊழல்தான் நினைவுக்கு வந்தது. உங்களால் அதிக நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியாது.

இந்த கூட்டணியில் மிகப்பெரிய பெயர்கள், குடும்பங்கள், ஊழல், லஞ்சம், எதிர்மறைத்தன்மை, நிலைத்தன்மை இல்லாமை, சமத்துவமின்மை போன்றவை நிறைந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊழல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்தவகையில் இது தனித்துவமானது.

பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கல்வி நிறுவனங்களில் போதிய இருக்கைகள் இல்லை என்ற குறை இருக்கிறது. இதை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் 10 சதவீத இருக்கைகளை நாங்கள் அதிகரிப்போம். இதன் மூலம் ஒவ்வொருவரும் வாய்ப்பு பெறுவர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது. இதனால் அவர்கள் பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். நாம் நமது பணியை சரியாக செய்திருப்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரையும் பிரதமர் மோடி பாராட்டினார். பாரிக்கரை நவீன கோவாவின் சிற்பி என புகழ்ந்துரைத்த மோடி, உடல் நலமின்றி இருக்கும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்