காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகையை காரில் கடத்திய கணவர்; அதிர்ச்சி பின்னணி...
கவுசிக்கின் காரை வழிமறிப்பதுபோல் நாடகமாடி தனது மனைவி சைத்ராவை தாக்கி தன்னுடைய காரில் ஹர்ஷவர்தன் கடத்தி சென்றார்.;
பெங்களூரு,
கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை சைத்ரா. பெங்களூருவில் தர்ஷன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஹர்ஷவர்தன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை இருக்கிறாள்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நடிகை சைத்ரா தனது மகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். மேலும் கன்னட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹர்ஷவர்தன் தனது மகளை பார்க்க வேண்டும் என்றும், தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்றும் சைத்ராவிடம் கேட்டார். ஆனால் அதற்கு சைத்ராவும், அவரது குடும்பத்தினரும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஹர்ஷவர்தன், கடும் கோபம் அடைந்தார். இந்த நிலையில் ஹர்ஷவர்தன் ஒரு திட்டம் தீட்டினார். அதாவது தனது மனைவியை கடத்தி மிரட்டி, மகளை பறித்துக் கொள்ள திட்டமிட்டார். அதன்படி தனது நண்பர் கவுசிக் என்பவர் மூலம் மைசூருவில் ஒரு படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வருமாறும் சைத்ராவிடம் கேட்டுள்ளார்.
சைத்ராவும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கேட்ட ரூ.20 ஆயிரம் முன்பணமும் கொடுக்கப்பட்டது. நேற்று வீட்டுக்கே காரில் வந்து அழைத்து செல்வதாக கவுசிக், சைத்ராவிடம் கூறியிருந்தார்.
அதன்படி நேற்று காலையில் சைத்ராவின் வீட்டுக்கு கவுசிக் காரில் வந்தார். அதன்பேரில் சைத்ராவும் காரில் ஏறி சென்றார். அவர்கள் நைஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு மற்றொரு காரில் வந்த ஹர்ஷவர்தன், கவுசிக்கின் காரை வழிமறிப்பதுபோல் நாடகமாடி தனது மனைவி சைத்ராவை தாக்கி தன்னுடைய காரில் கடத்தி சென்றார்.
மேலும் அவர் சைத்ராவின் தாயை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகளை(சைத்ரா) கடத்தி இருக்கிறேன், என் மகளை என்னிடம் கொடுத்து விடுங்கள், அப்போதுதான் உங்களது மகளை பாதுகாப்பாக விடுவிப்பேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன சைத்ராவின் தாய் இதுபற்றி தன்னுடைய 2-வது மகளிடம் தெரிவித்தார். அதன்பேரில் அவர் இதுபற்றி பேடராயனபுரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ஹர்ஷவர்தனையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.