சர்ச்சைக்குரிய படங்கள் இடம்பெற்ற ஓவிய கண்காட்சிக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

சர்ச்சைக்குரிய படங்கள் இடம்பெற்ற ஓவிய கண்காட்சிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-21 11:14 GMT
சென்னை,

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நடந்த ஓவிய கண்காட்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவை விமர்சனம் செய்யும் வகையிலான புகைப்படங்கள் இடம்பெற்றது. மத சின்னங்களை பிரதிபலிக்கும் வகையிலும் ஓவியங்கள் இடம்பெற்று இருந்தது. பாரத தாய் பாலியல் தொல்லையால் நானும் பாதிக்கப்பட்டேன் என கூறுவது போன்ற புகைப்படமும் இழிவுப்படுத்தும் வகையில் இடம்பெற்று இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்புகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
லயோலா கல்லூரியில் நடந்த ஓவிய காட்சியில் பாரதமாதாவை குறிப்பிட்டு ஓவியம் வரைந்ததை கண்டு ரத்தம் கொதிக்கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும், இல்லையெனில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார். 

டுவிட்டரில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்டுள்ள செய்தியில், லயோலா கல்லூரியில் இந்து மத நம்பிக்கை சின்னங்களையும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாரத பிரதமரையும், பாரதமாதாவையும் இழிவு படுத்தும் கண்காட்சியை நடத்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டிக்கிறோம். மதசார்பின்மை என சொல்லிக்கொள்ளும் கட்சி தலைவர்கள் அங்கே பங்கேற்பு! நடுநிலையாளர்கள் சிந்திக்க! பாஜக போராடும் என்றார்.

பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் சர்ச்சைக்குரிய படங்கள் இடம்பெற்ற ஓவிய கண்காட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 

“இந்துமத சின்னங்களை கேவலப்படுத்தியுள்ளனர். பெண்களை  வேகவலப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற ஓவியங்கள் புண்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன? இதுபோன்ற கேவலமான சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. மதகலவரத்தை தூண்டவே இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு திட்டமிட்டோம். மன்னிப்பு கோரியதால் தவிர்க்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை சகித்துகொள்ள மாட்டோம். கண்காட்சிகளுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்