பயனற்ற அரசுக்காக உங்களது வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்; ஹசாரேவிடம் ராஜ் தாக்கரே வேண்டுகோள்

பயனற்ற அரசுக்காக உங்களது வாழ்க்கையை தியாகம் செய்யாதீர் என அன்னா ஹசாரேவிடம் ராஜ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-02-04 11:53 GMT
மும்பை,

சமூக ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான மராட்டியத்தை சேர்ந்த அன்னா ஹசாரேவின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

லோக் ஆயுக்தா அமைப்புகள் மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு வலுவிழந்து இருப்பதால், புதிய சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த வலியுறுத்தியும் அன்னா ஹசாரே காந்தி நினைவு தினமான கடந்த புதன்கிழமை தனது உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் தொடங்கினார்.  அவரது உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது.

அவரை, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே இன்று சந்தித்து பேசினார். அவருக்கு தனது முழு ஆதரவை வழங்கிய தாக்கரே, பயனற்ற அரசுக்காக உங்களது வாழ்க்கையை தியாகம் செய்யாதீர் என கூறினார்.

இதனை அடுத்து இருவரும் யாதவ்பாபா கோவில் வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் 20 நிமிடங்கள் வரை பேசினர். இதன்பின் ஹசாரேவின் போராட்ட பகுதியில் பேசிய தாக்கரே, பிரதமர் மோடி நாட்டை மோசடி செய்து விட்டார்.  தனது கட்சியின் சொந்த தேர்தல் வாக்குறுதியை கூட அவர் பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு கூறினார்.

லோக்பாலுக்கு ஆதரவாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 18-ல் டுவிட் செய்தவர் மோடி. 5 வருட மோடி ஆட்சி முடிந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் ஹசாரேவின் 2013-ம் ஆண்டு போராட்டத்தினால் வந்தவர்கள். அதனை அவர்கள் மறக்க கூடாது.

ஹசாரே போராட்டத்தில் பங்கேற்று பிரபலமடைந்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூட வராமல் அல்லது ஹசாரேவின் உடல்நிலை பற்றி விசாரிக்காமல் இருப்பது என்பது ஆச்சரியம் அளிக்கிறது என தாக்கரே கூறினார்.  இவர்கள் அனைவரும் நேர்மையற்றவர்கள் என ஹசாரேவிடம் கூறினேன் என்றும் தாக்கரே கூறியுள்ளார்.

நீங்கள் போராட்டத்தினை கைவிட வேண்டும். அதன்பின் பாரதீய ஜனதா தலைமையிலான அரசை வீழ்த்துவதற்கு நாம் இணைந்து மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். உங்களது போராட்டத்திற்காக எனது கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் அன்னா ஹசாரேவிடம் தாக்கரே கூறினார்.

மேலும் செய்திகள்