தெலுங்கானாவில் நண்பர்களுடன் விளையாடிய தமிழக சிறுவன் மின் கம்பி உரசி உயிரிழப்பு

தெலுங்கானாவில் நண்பர்களுடன் விளையாடிய 1ம் வகுப்பு தமிழக மாணவன் மின் கம்பி உரசியதில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-02-12 12:04 GMT
தெலுங்கானாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தினை சேர்ந்த நபரொருவரின் 6 வயது மகன் தனது நண்பர்களுடன் குடியிருப்பு பகுதியில் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.

இந்த நிலையில், மின்கம்பம் அருகில் இருந்த மின்கம்பி ஒன்றை பிடித்து தொங்கி விளையாடுவதற்காக சிறுவன் முயன்றுள்ளான்.  ஆனால் சிறுவன் மீது மின்சாரம் கடுமையாக தாக்கி உள்ளது.

இதனால் தொடர்ந்து 5 நிமிடங்கள் வரை சிறுவன் கம்பத்துடன் ஒன்றியபடி இருந்துள்ளான்.  ஆனால் சிறுவனின் அருகே நடந்து சென்ற குடியிருப்புவாசிகள் பலர் என்ன நடந்துள்ளது என கவனிக்கவில்லை.

இதனிடையே 5 நிமிடங்களுக்கு பின் சிறுவன் கம்பத்தில் இருந்து விடுபட்டு மயங்கி கீழே விழுந்துள்ளான்.  இதனை கவனித்த மற்றொரு சிறுவன் பாதுகாவலரிடம் ஓடி சென்று தெரிவித்து உள்ளான்.  சிறுவனை தொட முயன்ற அவருக்கும் சிறிய அளவில் ஷாக் அடித்து உள்ளது.  இது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது.

உடனடியாக அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் அவன் உயிரிழந்து விட்டான் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.  போலீசார் ஐ.பி.சி.யின் 304ஏ பிரிவின் கீழ் (கவன குறைவால் மரணம் விளைவித்தல்) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த குடியிருப்பு பகுதியில் இதுபோன்று 10 மின் கம்பங்கள் உள்ளன.  தனது பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் குடியிருப்பின் முன்பிருந்த மின் கம்பத்துடன் விளையாட முயற்சித்து உயிரிழந்து உள்ளான்.  இது அந்த பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.  இந்த சம்பவத்தினை அடுத்து அந்த தம்பதி தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்