உடல் நலம் தேறியது: அருண் ஜெட்லி மீண்டும் நிதி மந்திரியாக பொறுப்பேற்றார்

உடல் நலம் தேறியதை அடுத்து, அருண் ஜெட்லி மீண்டும் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2019-02-15 23:00 GMT
புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த மாதம் 13-ந்தேதி அமெரிக்காவுக்கு சென்றார். இதனால் அவர் வகித்து வந்த நிதி இலாகா, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. அவரும், நிதித்துறையை கூடுதலாக கவனித்ததுடன், கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய அருண் ஜெட்லி, கடந்த வாரம் நாடு திரும்பினார். எனவே அவரிடம் நிதி இலாகா மீண்டும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நிதித்துறையை அருண் ஜெட்லி நேற்று ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் முதல் நிகழ்ச்சியாக, புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக கூடிய பாதுகாப்புத்துறைக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்ததால் ஜெட்லி உடல் சோர்ந்து காணப்பட்டார். எனவே அவரை சிலர் கைத்தாங்கலாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்