காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் மட்டுமே போட்டி இருந்தது - பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் யார் அதிகம் ஊழல் செய்வது என்பதில் மட்டுமே போட்டி இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Update: 2019-02-23 23:30 GMT
புதுடெல்லி,

டெல்லியில் சர்வதேச பொருளாதார மாநாடு நேற்று நடந்தது. இதில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்திய பொருளாதாரம் தற்போது ரூ.177 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் இந்தியா உலக அளவில் 6-வது இடத்தை பிடித்து இருக்கிறது. இதை ரூ.710 லட்சம் கோடி என்ற அளவில் உயர்த்தி, உலக அரங்கில் 3-வது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் யார் அதிகம் ஊழல் செய்வது, ஊழலில் யார் புதுமையை புகுத்துவது, அதில் யார் முதலிடம் வகிப்பது என்பதில் மந்திரிகள், தனி நபர்கள் இடையே போட்டி இருந்தது. இதற்கு உதாரணமாக நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல், ராணுவ ஒப்பந்தத்தில் ஊழல் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் யார், யாருக்கு தொடர்பு இருந்தது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்நிலை மாறி விட்டது. மாற்றம் நன்றாக தெரிகிறது. நிதி முதலீட்டை ஊக்குவிப்பது, ஏழைகளுக்கு வீடு கட்டி தருவது, சாலை வசதி, அனைவருக்கும் சமையல் எரிவாயு இணைப்பு, தூய்மையை பேணுவது, மாநில வளர்ச்சிக்கான இலக்கை அடைவது போன்றவற்றில் தற்போதைய மந்திரிகளிடையே யார் சிறப்பாக பணியாற்றுவது என்பதில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதாரம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால் தற்போது வளர்ச்சி விகிதம் சராசரியாக 7.4 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது. பணவீக்க விகிதம் சராசரியாக 4.5 சதவீதத்துக்கு கீழேயே உள்ளது.

மக்களிடையே தயக்கம் என்ற நிலை மாறி நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. முடியாதது என்பது எதுவும் இல்லை. முந்தைய ஆட்சியில் முடியாது என்பதை மாற்றி தற்போது அனைத்தும் சாத்தியம் என்பதை தூய்மை இந்தியா திட்டம், ஊழலற்ற ஆட்சி போன்றவற்றின் மூலம் உருவாக்கி உள்ளோம்.

சாத்தியமற்றது தற்போது சாத்தியம் ஆகும் என்பதே பா.ஜனதா அரசின் தற்போதைய தேர்தல் தாரக மந்திரம் ஆகும். மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். இந்த அரசின் எதிர்கால கனவு, புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது ஆகும்.

கடந்த காலங்களில் நடந்தது எதுவும் நம் கையில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் நடப்பது நிச்சயம் நமது கையில் உள்ளது. கடந்த 3 தொழில் புரட்சியில் நம் வாய்ப்பை தவற விட்டு விட்டோம். ஆனால் 4-வது தொழில் புரட்சியில் இந்தியாவின் பங்கு இருப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்