இந்திய விமான படை தாக்குதலை பட்டாசு வெடித்து கொண்டாடியதில் மோதல்; 15 பேர் மீது வழக்கு

பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமான படை நடத்திய தாக்குதலை பட்டாசு வெடித்து கொண்டாடியதில் ஏற்பட்ட மோதலில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-03-05 10:16 GMT
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர்.

இதனை தொடர்ந்து கடந்த 26ந்தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது.  இதில் தீவிரவாதிகள், தீவிரவாத பயிற்சி பெறுவோர், தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த 27ந்தேதி காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்து, தாக்குதல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தன.  

பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமான படை நடத்திய தாக்குதலை மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில் பெண் ஒருவரும் அவரது மகனும் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.  இந்த பெண் முன்னாள் நகராட்சி அதிகாரி ஆவார்.  இந்த நிலையில், அந்த வழியே ஒருவர் சென்றுள்ளார்.  அவரை கவனமுடன் செல்லும்படி சிறுவன் கூறியுள்ளான்.

இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.  அந்த நபர் சிறுவனை அறைந்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  இதன்பின் இதுபற்றி அந்நபரிடம் அந்த பெண் கேள்வி கேட்டுள்ளார்.  இதில் பெண்ணையும் அவரது மகனையும் அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.

இதுபற்றி போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.  அந்நபரும் பெண் மற்றும் அவரது மகன் மீது புகார் அளித்துள்ளார்.  இதனால் இரு தரப்பினையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.  விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்