விஜய் மல்லையாவின் மதுபான நிறுவன பங்குகள் ரூ.1,008 கோடிக்கு விற்பனை - அமலாக்கத்துறை தகவல்

தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மதுபான நிறுவன பங்குகள் ரூ.1,008 கோடிக்கு விற்பனை ஆனதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

Update: 2019-03-27 20:30 GMT
புதுடெல்லி,

தொழில் அதிபர் விஜய் மல்லையா தன்னுடைய விமான நிறுவனமான கிங் பிஷர் பெயரில் ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். அவர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் விஜய் மல்லையாவின் சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் பண மோசடி தொடர்பாக விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனத்தின் 74 லட்சத்து 4 ஆயிரத்து 932 பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்தது. அந்த பங்குகளை கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி மதுபான நிறுவன பங்குகள், கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த தீர்ப்பாயம் கடந்த மாதம் இந்த பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக செய்தி வெளியிட்டது. மேலும் அந்த பங்குகளை விற்பனை செய்ய பணமோசடி குறித்து விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டும் அனுமதி அளித்தது.

அதன்படி விஜய் மல்லையாவின் மதுபான நிறுவன பங்குகள் ரூ.1,008 கோடிக்கு விற்பனை ஆனதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்து உள்ளது. விஜய் மல்லையா வாங்கிய கடனை ஈடுகட்டும் வகையில் அந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாக அமலாக் கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்