ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு: உமர் அப்துல்லா விமர்சனம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதை உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

Update: 2019-04-04 01:26 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாரத்தில் இருநாள்கள் மட்டும் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதங்களுக்கு இந்த கட்டுப்பாடு தொடரும். அந்த சாலையில் உள்ள புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்போது, பொதுப் போக்குவரத்தை அச்சாலையில் அனுமதிப்பதில்லை என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்படி 270 கி.மீ. தொலைவுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் புதன், ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் பொதுமக்களின் வாகனங்கள் செல்லக்கூடாது. அதையும் மீறி ஏதாவது அவசர விஷயத்துக்காக அச்சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் போலீஸாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

 காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவின்போது அவசரப் போக்குவரத்துக்காக இதுபோன்று அனுமதி வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு வர்த்தகர்கள், சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஜம்மு -ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது மோடியின் தோல்வியை காட்டுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் உள்பாதுகாப்பு பராமரிப்பின் தோல்வியே இது எனவும் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்