அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி

அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

Update: 2019-04-10 01:09 GMT
அமேதி,

17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு வேட்புமனு தாக்கல் ஊர்வலத்தை மேற்கொள்கிறார். இதையடுத்து, அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் உடனிருப்பர்.

ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது அமேதியில் 6-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்