அசம்கான் ஆபாச பேச்சு விவகாரம்: ‘மாயாவதி, மம்தா பானர்ஜி ஆதரவு தராதது வருத்தமளிக்கிறது’ - நடிகை ஜெயப்பிரதா பேட்டி

அசம்கான் ஆபாச பேச்சு விவகாரத்தில், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவு தராதது வருத்தமளிக்கிறது என நடிகை ஜெயப்பிரதா தெரிவித்தார்.

Update: 2019-04-20 22:27 GMT
ஐதராபாத்,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பிரபல நடிகை ஜெயப்பிரதா ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராம்பூர் தொகுதியில் என்னை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடும் அசம்கான், தேர்தல் பிரசாரத்தின்போது என்னை ஆபாசமாக பேசினார். தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் அசம்கான் இப்படி பேசி வருகிறார். இவரது பேச்சை அதே மேடையில் இருந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டிக்கவில்லை. இந்த பேச்சுக்கு, அகிலேஷ் யாதவின் மனைவி கருத்து தெரிவித்தது வேதனை அளிக்கிறது. என்னை ஆபாசமாக பேசிய அசம்கானை 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதித்த தேர்தல் ஆணையத்துக்கும், நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நீண்டகாலமாக அரசியலில் துணிச்சல் மிகுந்த அரசியல்வாதிகள் என சொல்லிக்கொள்ளும் மாயாவதியும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், எனக்கு ஆதரவு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அசம்கானை சகோதரன் என்று அழைத்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். ராம்பூர் தொகுதியில் எனது வெற்றி உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்