மாசு புகை வழக்கு: தற்காலிகமாக நிவாரணம் பெற்றது வோல்க்ஸ்வோகன்

எமிஷன் விதிகளை மீறியதற்காக வோல்க்ஸ்வோகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி அபராதமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மார்ச் மாதம் விதித்து இருந்தது.

Update: 2019-05-06 08:08 GMT
புதுடெல்லி,

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோல்க்ஸ்வோகன் நிறுவனம் தயாரித்த டீசல் கார்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, 40 மடங்கு அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவது ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

அமெரிக்காவில் நடந்த புகை மாசு பரிசோதனையில், அந்நிறுவனம் முறைகேடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்த வோல்க்ஸ்வோகன் நிறுவனம், லட்சக்கணக்கான கார்களை திரும்பப்பெற்றது. இந்தியாவிலும் அந்நிறுவனம் மாசு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால், அந்நிறுவனத்திற்கு ரூ. 500 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வோல்க்ஸ்வோகன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை வோல்க்ஸ்வோகன் நிறுவனம், அபராதம் கட்ட வேண்டிய அவசியமில்லை என கூறியது. இதனால், தற்போதைக்கு வோல்க்ஸ்வோகன் நிறுவனம் ரூ.500 கோடி அபராதம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் செய்திகள்