போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்

ராஜீவ் காந்தி கடற்படையின் போர்க்கப்பலில் சொந்த பயணம் மேற்கொண்டதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

Update: 2019-05-10 23:15 GMT
புதுடெல்லி,

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய கடற்படையின் ஐ.என். எஸ். விராட் போர்க்கப்பலை லட்சத்தீவு செல்ல தனது சொந்த பயணத்துக்கு பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற கடற்படை தளபதி அட்மிரல் எல்.ராமதாஸ் உள்பட முன்னாள் அதிகாரிகள் பலர் ராஜீவ் காந்தி மேற்கொண்டது சொந்த பயணம் அல்ல, அரசு முறை பயணம் தான் என்று கூறினர். அந்த கப்பலில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியிருந்தனர்.

காங்கிரசார் பதிலுக்கு பிரதமர் மோடி கனடா நாட்டு குடியுரிமை வைத்துள்ள நடிகர் அக்‌ஷய்குமாரை ஐ.என்.எஸ். சுமித்ரா கப்பலில் அழைத்துச் சென்றதாக கூறினர். இந்திய விமானப்படை விமானங்களை மோடி சொந்த நலனுக்காக ரூ.744 மட்டுமே கட்டணம் செலுத்தி தேர்தல் பயணங்களுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் வலைத்தளத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த பொய்யும் அம்பலமாகிவிட்டது. கடற்படையின் உயர் அதிகாரிகள் ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலில் அரசு பயணம்தான் மேற்கொண்டார் என்று கூறியுள்ளனர். எனக்கு வியப்பாக இருக்கிறது. பிரதமருக்கு யார் இந்த பொய் களை எல்லாம் சொல்கிறார்கள்? பிரதமர் ஏன் உண்மையை கண்டறியாமல் தொடர்ந்து பொய்களை சொல்லி வருகிறார்?” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில், “உங்களின் சமீபத்திய பேச்சுகள், பேட்டி, வீடியோ ஆகியவை நீங்கள் ஒருவித அழுத்தத்தில் இருப்பதை இந்திய மக்களுக்கு தெரிவிக்கிறது. எப்படியென்றாலும், தேர்தல் முடிவுகள் பற்றிய பதற்றம் உங்களிடம் இருப்பது மிகச்சரியானது தான்” என்று கூறியுள்ளார்.

அதேபோல இமாசலபிரதேசம் உனா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கூறும்போது, “மோடி என் மீதும், மறைந்த பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மீதும் வெறுப்பை காட்டுகிறார். ஆனால் நான் பதிலுக்கு அன்பை காட்டுகிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்