பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்

பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

Update: 2019-05-15 14:15 GMT
பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்காக  நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்த எனது அனுபவத்தில் ஒன்றை சொல்கிறேன். பா.ஜனதா கட்சியோ அல்லது அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோ மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. நரேந்திர மோடியும் 2–வது முறையாக பிரதமராக முடியாது. 

தேர்தல் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, பா.ஜனதா அல்லாத அரசு தான் மத்தியில் அமையும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மத்திய அரசுக்கு தலைமை தாங்குவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயர் ஒருமித்த கருத்துடன் பரிந்துரைக்கப்பட்டால் நல்லது. அதேசமயம் காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் நாங்கள் வேறு எந்த தலைவரையும் பிரதமர் பதவிக்கு ஏற்க மாட்டோம் என்ற பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

பா.ஜனதா கட்சிக்கு 125 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்ற அவர், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை கூற மறுத்து விட்டார். 

மேலும் செய்திகள்