நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்

நாடாளுமன்ற தேர்தலில் வென்று 4 சுயேச்சை எம்.பி.க்கள் புதிய மக்களவைக்கு செல்கின்றனர்.

Update: 2019-05-24 22:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது சமீப காலத்தில் அபூர்வமாகி விட்டது.

1951-52-ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் 37 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதற்கு அடுத்து 1957-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் அதிகபட்சமாக 42 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களவையை அலங்கரித்தனர்.

1962-ல் 20 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1967-ம் ஆண்டு வென்ற சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

1971-ல் தான் கடைசியாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் 12 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றனர். அதன்பின்னர் நடந்த 10 தேர்தல்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் சுயேச்சைகள் வென்றனர். அதிலும் 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒரே சுயேச்சை வேட்பாளர்தான் வெற்றி பெற்றார்.

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சற்றே ஆறுதல் அளிக்கிற வகையில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று புதிய மக்களவைக்கு செல்கின்றனர்.

அவர்கள் விவரம் வருமாறு:-

நடிகை சுமலதா அம்பரீஷ்

3 முறை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த கன்னட நடிகர் அம்பரீஷ் மனைவியான சுமலதா, கர்நாடக மாநிலம், மண்டியா தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் தர வில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு அளித்தது.

அவர் தனக்கு அடுத்த படியாக வந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின்வேட்பாளரும், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில்குமாரசாமியை 1 லட்சத்து 25 ஆயிரத்து 622 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டார்.

நடிகை நவ்னித் ரவிரானா

மராட்டிய மாநிலத்தில் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் நடிகை நவ்னித் ரவி ரானா, தனக்கு அடுத்தபடியாக வந்த சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த்ராவ் அத்சுலை 37 ஆயிரத்து 295 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நவ்னித் ரவி ரானா ஒரு சமூக சேவகரும் ஆவார். இவரது கணவர் ரவிரானா மராட்டிய சட்டசபையில் சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார்.

நவகுமார் சாரணியா

அசாம் மாநிலம், கோக்ரஜார் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார், நவகுமார் சாரணியா.

இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த போடோலேண்ட் மக்கள் முன்னணி வேட்பாளர் பிரமிளா ராணி பரம்மாவை 39 ஆயிரத்து 146 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

மோகன்பாய் சஞ்சிபாய் டெல்கார்

இவர் தாத்ரா நகர் ஹவேலியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரும், 16-வது மக்களவை உறுப்பினருமான நாதுபாய் கோன்பாய் பட்டேலை 9 ஆயிரத்து 15 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேலும் செய்திகள்