பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-27 07:10 GMT
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில்  தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு பாஜக மட்டும் 303 இடங்களை வென்றது. இருந்தாலும், கடந்தமுறை போலவே கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. 

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற பாரதீய ஜனதா குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து அதுபற்றிய தகவலை தெரிவித்து, தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை கொடுத்து புதிய அரசு அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரினார். அதன்பேரில் மோடியை புதிய பிரதமராக நியமித்த ஜனாதிபதி, மந்திரிகள் பட்டியல், பதவி ஏற்கும் நாள் போன்ற விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக மோடி பதவி ஏற்க இருப்பதாகவும், அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள் என்றும் ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஜினிகாந்துக்கு அழைப்பு

மோடியின் பதவியேற்பு விழாவில்,  பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தர்பார் படப்பிடிப்புக்காக நாளை மும்பை செல்லும் ரஜினிகாந்த், 30 ஆம் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்று மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்