விமான போக்குவரத்தில் முறைகேடு - முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

விமான போக்குவரத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Update: 2019-06-01 22:13 GMT
புதுடெல்லி,

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விமான போக்குவரத்து மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேல் இருந்தார். அப்போது பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு லாபகரமான வழித்தடங்கள் மற்றும் குறிப்பிட்ட நேரங்கள் வழங்கப்பட்டது. இதனால் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வார் என்பவரை சமீபத்தில் கைது செய்தது.

தீபக் தல்வார் அப்போதைய மத்திய மந்திரி பிரபுல் பட்டேலுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பிரபுல் பட்டேலிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரபுல் பட்டேல் வருகிற 6-ந் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில் ஒரு அரசியல் தலைவர் மீது நடவடிக்கை எடுப்பது இது தான் முதல் முறை.

பிரபுல் பட்டேல் கூறும்போது, “விமான போக்குவரத்து தொழிலில் உள்ள சிக்கல்களை அவர்கள் புரிந்துகொள்வதற்காக, நான் மகிழ்ச்சியுடன் அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பேன்” என்றார்.

மேலும் செய்திகள்