கேரளாவில் இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம்

கேரளாவில் இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.

Update: 2019-06-07 23:30 GMT
கொச்சி,

கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரளா வந்தார். சிறப்பு விமானம் மூலம் கொச்சி கடற்படை தளத்தில் வந்திறங்கிய மோடி, எர்ணாகுளத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இன்று (சனிக்கிழமை) காலை கொச்சி கடற்படை தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார்.

அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு பிற்பகலில் டெல்லி புறப்பட்டு செல்வார் என தெரிகிறது. முன்னதாக மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று கேரளா வந்தார். இதற்காக நேற்று பிற்பகல் கோழிக்கோடு விமான நிலையம் வந்திறங்கிய அவர் கார் மூலம் வயநாட்டுக்கு புறப்பட்டார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை அந்த தொகுதியிலேயே தங்கியிருக்கும் ராகுல் காந்தி, சுமார் 15 வரவேற்பு கூட்டங்களில் பங்கேற்கிறார். பின்னர் நாளை பிற்பகல் 2 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்வதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்