இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

Update: 2019-06-09 22:30 GMT
மும்பை,

முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு ஹஜ் புனித பயண ஏற்பாடுகள் குறித்து தனியார் சுற்றுலா நிறுவன பொறுப்பாளர்களுடன், மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதேபோல் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய உள்ளனர்.

இதன்படி கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் எந்தவித மானியமும் இன்றி ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதேபோல் 2 ஆயிரத்து 340 பெண்கள் ஆண்களின் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் பேரில் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர்.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் விமானங்கள் மூலம் பயணிகள் ஹஜ் புனித பயணத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இந்திய பயணிகளுக்காக மெக்காவில் 11 இடங்களிலும், மதினாவில் 3 இடங்களிலும் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்