வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது -பிரதமர் மோடி டுவீட்

வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-12 10:46 GMT
புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை 8-ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது.

அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி, நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கிறது.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி.மீ வரை இருக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறேன்.

தேவையான உதவிகளை வழங்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். அரசு மற்றும் உள்ளூர் முகவர்கள் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் சென்று  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

குஜராத் உள்ளிட்ட வாயு புயல் பாதிக்கும் மாநிலங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பிற்காகவும், நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்