வலு இழந்த நிலையில் ‘வாயு’ புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கிறது

வலு இழந்த நிலையில் வாயு புயல், குஜராத்தில் இன்று கரையை கடக்க உள்ளது.

Update: 2019-06-16 22:47 GMT
ஆமதாபாத்,

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்தது. கடந்த 13-ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த புயல் திசைமாறி கடலோர பகுதியையொட்டி மேற்கு நோக்கி நகர்ந்தது.

இந்நிலையில் ‘வாயு’ புயல் மீண்டும் திசைமாறி குஜராத் கடற்கரை பகுதி நோக்கி திரும்பி உள்ளது. எனினும் புயல் வலு இழந்து தாழ்வழுத்த மண்டலமாக மாறி போர்பந்தரில் இருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை கடல் பகுதியில் மையம் கொண்டிருந்தது. இது 12 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த புயல் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) குஜராத் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து குஜராத் அரசு மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்